Tamilswiss.com

நீண்டகால தாமதத்திற்குப் பின் ஜெனீவாவில் நிறுவப்பட்டது சர்ச்சைக்குரிய அர்மேனிய நினைவுச்சின்னம்..!

நீண்டகால தாமதத்திற்குப் பின் ஜெனீவாவில் நிறுவப்பட்டது சர்ச்சைக்குரிய அர்மேனிய நினைவுச்சின்னம்..!

1915-1917 அர்மேனிய இனப்படுகொலையை நினைவுகூறும் தெரு விளக்குகளின் நினைவுத் தொடர் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. துருக்கிய குழுக்கள் இந்த முயற்சியை ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளன.

"நினைவுத் தெரு விளக்குகள்" கடந்த வெள்ளியன்று சுவிட்சர்லாந்து சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கான தற்போதைய அர்மேனிய தூதர் சார்லஸ் அஸ்னவோர், மற்றும் இந்த நினைவுச் சின்னங்களை வடிவமைத்த கலைஞர் மெலிக் ஓஹானியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

கூட்டாட்சி நிர்வாகத்தின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 1915-1917 இனப்படுகொலைக்கு எதிரான அரசியல் பதட்டம் நிலவிவரும் சூழ்நிலையில், துருக்கி இதற்கு பொறுப்பேற்க மறுக்கிறது.

ஜெனீவாவில் அமைந்துள்ள ட்ரம்ப்லே பூங்காவில் சுவிஸ் பொது ஒளிபரப்பாளரான ஆர்.டி.எஸ்-இடம் பேசுகையில், சார்லஸ் அஸ்னவோர், இந்த நினைவுச்சின்னம் கடந்தகால நிகழ்வு பற்றிய நினைவூட்டல் மட்டுமல்ல, இதுபோன்று மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதற்கான ஒரு நினைவுச்சின்னமும் கூட" என்று அர்மேனிய தூதர் சார்லஸ் அஸ்னவோர் கூறினார்.

துருக்கிய பிரதிநிதி குழுக்கள், குறிப்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் துருக்கிய சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, இந்த 10 மீட்டர் உயர நினைவுச்சின்னங்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் முடிவை விமர்சித்தது.

"இந்த நினைவுச்சின்னம் சமூகங்களுக்கிடையேயான மோதல்களின் அடையாளமாக இருப்பதால் நாங்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளோம், இது மிகவும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன்," என்று கூட்டமைப்பின் தலைவர் செலல் பேயர் தெரிவித்தார். "ஜெனீவா நகரம் ஒரு பெரிய தவறை இழைத்துள்ளது."

இந்த நினைவுச்சின்னம் ஜெனீவா அதிகாரிகளால் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2008 இல் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அது அமையவிருந்த இடம் மற்றும் அரசியல் பதட்டங்கள் குறித்த சர்ச்சைகள் அதன் நிறுவலை தாமதப்படுத்தின.

2001 ல் ஜெனீவா பாராளுமன்றமும் மற்றும் 2003 ல் சுவிஸ் கூட்டாட்சி பாராளுமன்றமும் அர்மேனிய இனப்படுகொலையை அங்கீகரித்தன.

(Image: www.swissinfo.ch)