Tamilswiss.com

சிரியா பதற்றம்: சுவிஸ் வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாடு..!

சிரியா பதற்றம்: சுவிஸ் வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாடு..!

சிரியாவில் அமெரிக்கத் தலைமையிலான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னேசியோ காசிஸ், பெர்ன் அமைதியாக இருந்ததற்கு பின்னால் இருக்கும் காரணத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

"இந்த [மேற்கத்திய] எதிர்விளைவை நான் வரவேற்கவில்லை, இராணுவ ரீதியாக எந்தவொரு விரிவாக்கத்தையும் நான் வரவேற்பதில்லை," என்று காசிஸ் NZZ am Sonntag பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார். இராணுவத் தீர்வை விடவும் நடுநிலையான மற்றும் அரசியல் ரீதியான தீர்வையே சுவிட்சர்லாந்து வலியுறுத்துவதாகக் கூறினார்.

"இராணுவ விரிவாக்கத்தை தடுப்பது தொடர்பான அனைத்து தரப்பினரையும் சுவிட்சர்லாந்து அழைக்கிறது," என்று அவர் கூறினார், மனிதாபிமான அக்கறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமையன்று அவர் தெரிவித்திருந்தார்.

சுவிட்சர்லாந்து இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக இருப்பினும், பதிலடி கொடுக்கும் முன் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காண விரும்பியதாகவும் காசிஸ் கூறினார். "உண்மைகள் தெளிவாகும் வரை நான் தீர்ப்புகளை நிறுத்தி வைக்கிறேன்," என்று கூறிய அவர், "சிரியா அத்தகைய இரசாயன பொருள்கள் பயன்படுத்தியது என இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை; இது ஒரு ஊகம் தான்," என்றும் தெரிவித்தார்.

இந்த கட்டத்தில் காசிஸின் கூட்டாட்சி குழு சகா கய் பார்மெலின் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் SonntagsBlick பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், டமாஸ்கஸ் அருகே கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலின் பின்னனியில் யார் இருக்கிறார் என்பதை ஐ.நா. கண்டறியும்வரை நாம் அனைவரும் காத்திருக்கவேண்டியது அவசியம், என்று அவர் பேசினார்.

(Image: www.swissinfo.ch)